இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஈஷா யோகா மையத்தின் யோக வகுப்பில் கலந்து கொண்டபோது இரண்டு சமஸ்கிருத பாடல்களைச் சொல்லிக்கொடுத்தனர். அப்பாடல்களின் மூலம் எது எனத் தெரியாமலே அதை மனனம் செய்துகொண்டேன். அந்தப் பாடல்கள்;
அசத்தோமா சத் கமய
தமசோமா ஜோதிர் கமய
ம்ருத்யோர்மா அமிர்தம் கமய
ஓம் சாந்தி. சாந்தி. சாந்தி.
ஸக நா வவது
ஸக நௌ புனக்தூ
ஸக வீர்யம் கரவாவஹை
தேஜஸ்வினா வதிதமஸ்து
மாவித் விஷா வஹை
ஓம் சாந்தி. சாந்தி. சாந்தி.
மேற்கண்ட இருபாடல்களில் முதல் பாடலுக்கு அர்த்தம் தெரிந்தது. ஆனால் இரண்டாம் பாடலில் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே புரியவில்லை. ஏதோ ஒரு தமிழ் பக்தி பாட்டில் 'ஸக நா வவது' என்ற வரிகள் வரும். அதைக்கொண்டு இது ஏதோ ஒரு பக்தி பாட்டு என நினைத்து கொண்டேன். ஆனால், இது ஒரு உபநிடத வரி என்று , சுகுமார் அழீகோடு அவர்கள் எழுதிய தத்வமஸி புத்தகத்தின் மூலம் அறிய முடிந்தது.
வேதம் என்பது அனைவருக்கும் உரிமையானது. வேதம் மந்திரங்கள் அடங்கியவை என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், அவற்றையும் தாண்டி அறத்தை பேசும் வேதத்தையும், வேதத்தில் இருந்து முளைத்தாலும் தனிசிறப்பு வாய்ந்த உபனிடதங்களையும் சுகுமார் இந்நூலில் அழகுற விளக்குகிறார். வேதம் என்பதே 'வித்' எனும் வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. வித் என்னும் சொல்லுக்கு 'அறிக' என்பது பொருள். வேதத்தை ஒரு மாபெரும் தரு(மரம்) என எடுத்து கொண்டால் அதில் மலர்ந்த ஒரு மனோகரமான பூ தான் உபநிடதங்கள்.
உபநிஷத் என்ற சொல்லுக்கு 'அருகே அமர்ந்து இருக்கிற', 'அடுத்து அமர்ந்து இருக்கிற'என்ற பொருள் சொல்லப்பட்டாலும், சங்கரரின் விளக்கத்தில் இருந்து 'எந்த வித்யை அறிந்து கொண்டால் நானாவித துன்பங்கள் மறையுமோ அதுதான் உபநிஷத்' என்று சொல்கிறார் ஆசிரியர்.
உபநிடதங்கள் என்பது காலத்தால் மாறாத ஒரு பெரும்பொருளாக இருக்க காரணம் அதன் மூன்று சிறப்புகள். முதலாவதாக வேதத்தில் இருந்து தோன்றிய மறுமலர்ச்சி. இரண்டாவது பழையவற்றை மறுப்பது. மூன்றாவது புதிதாக ஒரு தரிசனத்தைக் கண்டறிவது. இந்த மூன்று நிலையிலும் சிறப்பு வாய்ந்த உபநிடதம் உயர்ந்து இமையம் போல் விளங்குகிறது.
வேதமும் அதிலிருந்து தோன்றிய யாகங்களுமே முக்கியம் என்ற ஒரு காலகட்டம் இருந்தது. அதன் பயனாய் வளர்ந்தது பிரம்மாணமும், சடங்குகளும், யாகத்தில் இருந்து தோன்றிய கண்களை மறைக்கக்கூடிய புகை மண்டலமும் தான். இந்திய தொல் வானில் அந்த மாபெரும் புகை எல்லாவற்றையும் மறைக்கும் சூழலில், ஒரு ஒளிச்சுடராய் தோன்றியது உபநிடதங்கள். அறத்தையும், உண்மையான நிலைத்த பொருள் பற்றியும் உரைத்ததால் பிரம்மாணம் தளர்ந்து உபனிடத ஒளி வீசியது. அதை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதன் பின்னரே புத்தர் போன்ற ஞானிகள் வரவும், அவர்கள் கண்ட தரிசனத்தை முன்வைக்கவும் முடிந்தது. இவ்வளவு பெரிய நிலத்தில் வேதம் என்ற ஒன்று மட்டும் இயங்காமல் எல்லாவற்றுக்கும் இடமளிக்க காரணம் உபநிடதங்கள் கூறிய வார்த்தைகளும் அதன் தரிசன முறைகளும்தான்.
மூன்று பகுதிகளாக இருக்கும் இந்நூலில் முதல் பகுதி வேதம், பிரம்மாணங்கள், ஆரண்யகங்கள் மற்றும் உபநிடதங்கள் பற்றி விளக்குகிறது. அவை தோன்றிய வரலாற்றையும் அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் மற்றும் ஒவ்வொன்றுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் விளக்குகிறார்.
(சுகுமார் அழீக்கோடு)
நூற்றுக்கும் மேற்பட்ட உபநிடதங்களில் முக்கியமான பத்து உபநிடதங்கள் பற்றி இரண்டாம் பகுதியில் இடம்பெறுகிறது. மூன்றாம் பகுதியில் இன்றைய நிலையில் வேதம், உபநிடதங்கள் பற்றிய பார்வையையும், மேலை நாட்டு அறிஞர்கள் கூறிய கருத்துக்களையும் சொல்கிறது.
உபனிடதங்களை விளக்கும்பொழுது, அதில் வரும் வரிகளுக்கு அர்த்தம் சொல்லும்போது, சங்கரர் முதலாக மேலை நாட்டு அறிஞர்கள் வரை அவர்கள் சொன்ன கருத்துக்களை சொல்கிறார் ஆசிரியர். அந்தக் குறிப்புகளையும் தனியாக ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் கொடுத்திருக்கிறார்.
ஈசம், கேனம், கடம், பிரச்சனம், முண்டகம், மாண்டூக்யம், தைத்திரியம், ஐதேரேயம், சாந்தோக்யம் மற்றும் பிருகதாரண்யகம் முதலான பத்து உபநிடதங்கள் ஏன் முக்கியமானவை, அவற்றின் பிரசித்தி பெற்ற மகாவாக்கியங்கள் பற்றி தெளிவாக சொல்கிறார் ஆசிரியர்.
தத்வமஸி, அகம் பிரஹ்மாஸ்மி, சத்யமேவ ஜயதே, நேதி நேதி, ஈசாவாஸ்யம் இதம் சர்வம் போன்ற உபநிடத்தில் இடம்பெற்ற மகாவாக்கியங்கள் பற்றி தெளிவுபடச் சொல்கிறார். தத்வமஸி என்ற சொல்லுக்கு, 'நீயே அது' என்ற பொருள் இருந்தாலும், தத்+த்வம் எனப்பிரித்து தத் என்ற சொல்லுக்கு வெளியே இருப்பதையும், த்வம் என்றால் உள்முகமான இருப்பையும் கண்டு , இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலை உண்டு. அதைக் கண்டறிவதுதான் தத்வமஸி என்ற சொல்லின் நோக்கம் என சொல்கிறது இந்நூல். மேலும் வாய்மையே வெல்லும் என்ற வரியான சத்யமேவ ஜெயதே எனும் வாக்கியம் இந்திய அரசில் அமைந்தது பற்றியும் சொல்கிறது.
பிருகதாரண்ய உபனிடதத்தில் ஒரு அவையில் கேட்கப்படும் கேள்விக்கு யாக்ஞவல்கியரின் பதில் கீழே:
மனிதனுக்கு ஒளி தருவது எது?
சூரியன்
அஸ்தமித்தால்?
சந்திரன்
இரண்டும் இல்லையென்றால்?
தீ
அது இல்லையென்று ஆகுமானால் ?
சொல்
அதுவும் போனால்..?
ஒரு தேவதை
எதுவுமே இல்லாதிருக்கும்போது?
ஆன்மா.
'ஓம் பூர்ணமத' எனத் தொடங்கும் உபனிடத சாந்தி பாடலில், பூரணத்தில் இருந்து பூரணத்தை எடுத்த பின்னரும் பூரணமே எஞ்சுகிறது என்ற மாபெரும் அறிவைப் பற்றி ஓரிடத்தில் சொல்லப்படுகிறது. அந்த வரிகள்;
ஓம் பூர்ணமத:
பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய
பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி:சாந்தி: சாந்தி
ஓம் பூர்ணமத:
பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய
பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி:சாந்தி: சாந்தி
யமனுக்கும் நசிகேதனுக்கும் நடந்த உரையாடல் பற்றியும், மற்ற சில புராணக்கதைகளும் நூலில் அங்கங்கே சொல்லப்பட்டுள்ளது.
இப்புத்தகம் படித்த பின்னர், வேதம் என்றால் என்ன, உபநிடதங்கள் என்றால் என்ன, எந்த வகையில் அவை முக்கியமானவை, மேலை அறிஞர்கள் வேதம் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை, சங்கரர் முதல்கொண்டு அரவிந்தர் வரை உபநிடதம் ஈர்க்க காரணம் என்னவென்பதை அறிய நேர்ந்தது. காந்தி, விவேகானந்தர் போன்ற பெருமக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதும் நூலில் அங்கங்கே சொல்லப்பட்டுள்ளது. இந்திய தத்துவம், வேதங்கள், உபநிஷத் பற்றி அறிய விரும்பும் வாசகனுக்கு, இந்நூல் ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்பதை அறுதியிட்டு சொல்லமுடியும்.
தத்வமஸி
சுகுமார் அழீக்கோடு (மலையாள மூலம்)
தமிழில்: ருத்ர துளசிதாஸ்
பதிப்பு: சாகித்ய அகாதெமி