ஆற்றுக்கடவில் மணலை வாரித் தொழில் செய்யும் சிலரைப் பற்றியது இந்நாவல். சுழிகள் நிறைந்த ஆறு போலவே, வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள். நீர் காணாத ஆறு போல வறுமை தாண்டவமாடும் வாழக்கை. வாரிக்கொடுத்த ஆறு இன்று சாக்கடை செல்லும் கால்வாயாய் பரிதாப தோற்றத்தில்.
அங்குசாமிக்கு சாலைத் தெருவில் மூட்டை சுமக்கும் வேலை. சின்ன வயதிலேயே சாலைத் தெருவில் வேலைக்கு வந்துவிட்டவர். தான் பிறந்த தமிழகத்தை விட்டு, மலையாளக் கரையிலேயே தங்கிவிட்டவர். ஒரு காவலர் வளாகத்தில் குடியிருக்கச் செல்கிறார் அங்குசாமி. அங்கே இருக்கும் தங்கம்மை என்ற பெண்ணுடன் பழக்கமாகி அவளையே கல்யாணம் செய்து கொள்கிறார்.
தங்கம்மைக்கு ஒரு போலீஸ்காரன் ஒருவனுடன் முன்னரே கல்யாணம் ஆகியிருந்தது. அவளுடன் இரண்டு மாதங்கள் மட்டுமே வாழ்ந்த அந்த போலீஸ்காரன் இறந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு குழந்தையும் உண்டாகிவிட்டது. பெண் குழந்தை. பெயர் பங்கி. பற்கள் விகாரமாய், கொஞ்சம் குண்டுக்கட்டான ஒரு மாதிரியான உடம்புடனும், கருமை நிறத்திலும் இருப்பாள் பங்கி. தங்கம்மைக்கு இப்படி ஒரு மகளா என முதல்முறை பார்க்கும்பொழுதே வியக்கிறார் அங்குசாமி. ஏனென்றால் தங்கம்மை அவ்வளவு அழகு. கணவன் இறந்த பின்னர் வந்த நாட்களில், நிறையப்பேர் அவளைப் பெண்கேட்டுச் செல்கிறார்கள். அவர்களை மறுத்துவிட்ட அவள், அங்குசாமிக்கு சரி என்கிறாள். அவளின் தகப்பன் சமையல்காரர் குட்டன் , 'இனிமேல் நீங்கள் இந்த மூட்டை சுமக்கும் வேலைக்குச் செல்லக்கூடாது' என்று சொல்லி, ஆற்றுக்கடவில் மணல் வாரும் தொழில் செய்யும் தனக்குத் தெரிந்த ஒருவரிடம் வேலைக்குச் சேர்த்துவிடுகிறார். மணல் வண்டிகளை கணக்கெடுத்து, மணல் வாரி நிறைப்பதை மேற்பார்வை செய்வது அங்குசாமியின் வேலை.
தங்கம்மையுடன் பழகிய நாட்களிலேயே, அங்குசாமிக்கு பங்கியைப் பிடிப்பதில்லை. முதல்முறை அவர்கள் தனிமையில் இருக்கும்போது, பங்கி அழுதவுடன் தங்கம்மை எழுந்து போய்விடுகிறாள். அங்குசாமிக்கு எரிச்சல் இருந்தாலும் தங்கம்மைக்காக பொறுத்துப் போகிறார்.
தாமோதரன் என்னும் இளவயதுப் பையனைத் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார் அங்குசாமி. அவனும் அவரைப்போலவே சிறுவயதில் ஊரைவிட்டு வந்தவன். தனது குடிசையை அடுத்து அவனுக்கும் ஒரு குடிசை அமைத்து தங்கவைக்கிறார். சிறுமியாய் இருக்கும் பங்கியுடன் தாமோதரன் விளையாடுகிறான். தன்னுடைய சகோதரி என்றே அவளை எண்ணுகிறான். பங்கி வளர்ந்த பின்னரும் கூட அங்குசாமிக்கு அவள் மேல் கோபம் தீர்வதில்லை. பார்த்தாலே எரிந்து விழுகிறார். ஊரில் உள்ள மற்றவரிடம் பேசுவதிலும், தாமோதரனிடம் பழகுவதில் எந்த பாரபட்சமும் பார்க்காத அங்குசாமிக்கு பங்கி என்றால் மட்டும் ஆகாது.
பங்கியும் இப்பொழுது ஆற்று வேலைக்கு வருகிறாள். முதலில் அவள் வேலைக்கு வருவதை மறுத்த அங்குசாமியை, தாமோதரன் சமாதானம் செய்து, தான் பார்த்துக்கொள்வதாக வேலைக்கு அழைத்து வருகிறான். சில நாட்களில், தங்கம்மைக்கு வந்த காய்ச்சலால் அவள் இறந்துபோகிறாள். அங்குசாமிக்கு தங்கம்மை போனது பெரும்துயராய் இருக்கிறது. இந்தப் பெண் பங்கி இல்லாவிட்டால், நானும் நீயும் எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று தாமோதரனிடம் சொல்கிறார். முன்பு ஆற்றுக்கடவில் வேலை அவ்வளவாய் இருப்பதில்லை. கூலி வாங்குவதும் தினப்படி செலவுக்கும் சரியாய் இருக்கிறது.
பங்கியை கல்யாணம் செய்து தரலாம் என்றால், யாரும் அமையவில்லை. ஒருவன் வந்து பங்கியைப் பார்த்துவிட்டு, இப்படி இருப்பவளை நான் கட்ட மாட்டேன்.. வேணும்னா நீ கட்டிக்கோ என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறான். தாமோதரன் 'இங்க பாரு, தங்கம்மை அக்கன் கிட்டே உனக்கு கல்யாணம் செய்து வைப்பது என்னோட கடமைன்னு சொல்லி இருக்கறேன். நீ எனக்கு தங்கச்சி மாதிரி. அப்படி யாராவது வரவில்லை என்றால். நானே உன்னை கட்டுவேன்' என்று பங்கியிடம் சொல்கிறான். பங்கிக்கும் அவன் மேல் பாசம் உண்டென்றாலும், இப்படிப்பட்ட ஒரு நல்லவனுக்கு தான் மனைவியாய் இருக்கக்கூடாது என்றெண்ணுகிறாள்.
அங்குசாமிக்கும், பங்கிக்கும் சில நேரங்களில் வாதம் ஏற்படும்பொழுது 'உன்னைக் கொண்டு போய் ஆற்றில் தள்ளினால்தான் எனக்கும், இதோ அடுத்தாப்பிலே இருக்கற தாமோதரனுக்கும் விமோசனம்.' என்று அங்குசாமி கத்துவார். அந்த நேரங்களில் தாமோதரன் வந்து சமாதானம் செய்வான். ஒரு நாள் அங்குசாமி ஆற்றங்கரையில் கீழே விழுந்து கையை முறித்துக்கொள்கிறார். வைத்தியர் எண்ணெய் போட்டு கட்டுப்போட்டு வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை. தாமோதரனும், பங்கியும் அவருக்குப் பணிவிடை செய்கிறார்கள். பங்கி கொண்டு வரும் காசில் தான் பசியாற வேண்டியிருக்கிறதே என்று இன்னும் கோபம் அதிகமாகிறது அங்குசாமிக்கு.
கை கொஞ்சம் சரியாகி கட்டுப் பிரித்தாகிவிட்டது. ஆனால் முன்பு போல வேலை செய்ய முடிவதில்லை. ஆற்றில் மணல் அள்ளும் வேலையும் குறைந்துவிட்டது. சில நாட்களாக தாமோதரனும், பங்கியும் செங்கல் சூளைக்கு வேலைக்குச் செல்கிறார்கள். கொஞ்ச நாட்களில், மழைபெய்ய ஆரம்பிக்கிறது. இடைவிடாத மழை.மூன்று நான்கு நாட்களுக்கு மேல் பெய்கிறது. அவர்கள் குடியிருந்த குடிசையும் ஒழுக ஆரம்பிக்கிறது. இருந்த காசு எல்லாம் கரைந்து விட்டது. காசிருந்தாலும், வெளியே கடைகள் எதுவுமில்லை. ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம். மழை நின்றாலும், நீர் வடியாமல் ஆற்று வேலைக்குப் போக முடியாது. மழை நின்ற ஒருநாள் தாமோதரன் அக்கரையில் உள்ள சூளையில் வேலை இருப்பதாக அறிந்து அங்கே போகலாம் என்கிறான். ஆட்களைக் கூட்டிக்கொண்டு, அங்குசாமி தாமோதரன் பங்கி என எல்லாரும் ஆற்றங்கரைக்குச் செல்கிறார்கள்.
நீர் ஓடும் வேகத்தைப் பார்த்ததும் தாமோதரன் வள்ளத்தில் அக்கரைக்குப் போகத் தயங்குகிறான். அங்குசாமியோ, இது நம்ம ஆறு, நாம தொழில் செய்யற இடம், அதெல்லாம் ஒண்ணும் ஆகாது எல்லாரும் வள்ளத்தில் ஏறுங்க என்று அதட்டுகிறார். எல்லோரும் வள்ளத்தில் ஏறிக்கொள்கிறார்கள். தாமோதரன் வள்ளம் வலிக்க ஆரம்பிக்கிறான். ஆனால் கொஞ்ச தூரம் போனதும் ஒரு சுழிப்பில் மாட்டி வள்ளம் கவிழ்ந்துபோகிறது. கரையில் இருந்த ஆட்கள் வள்ளம் முங்குவதைப் பார்த்துக் கத்துகிறார்கள். ஆற்றில் கவிழ்ந்த ஒவ்வொருவராக நீந்திக் கரையேறுகிறார்கள். ஆண்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறது. இரண்டு பெண்களில் ஒருத்தி இருக்கிறாள். அப்படியென்றால் இன்னொரு பெண்ணான பங்கி ஆற்றோடு போய்விட்டாள்.
'ஆ பங்கியா' என்று கரையேறிய அங்குசாமி நினைத்துப்பார்க்கிறார். ஆற்றில் அவர் நீந்தும்பொழுது ஒரு கை அவர் காலைக் கெட்டியாகப் பிடிக்கிறது. அவர் அந்தக்கையை ஒரு உந்து உந்தி உதறிவிட்டு மேலே நீந்தி வருகிறார். அப்பொழுது அவர் கால்களில் ஒரு பெண்ணின் தலைமுடி படுகிறது. அப்படியென்றால் அது பங்கி தான் என்று எண்ணுகிறார் அங்குசாமி.
இது அங்குசாமியின் பிழையா என்றால், ஆமென்றும் சொல்லலாம். இல்லையென்றும் சொல்லலாம். அவரவர்க்கு அவரவர் நியாயங்கள்.