Friday, August 1, 2014

ரப்பர் - ஜெயமோகன்

ஜெயமோகன் எழுதிய முதல் நாவல் ரப்பர். ஓரிடத்தில், ரப்பர் மரங்கள் பற்றி இப்படிச் சொல்கிறது நாவல்;  "ரப்பர் மரம் தன் பக்கத்தில் எந்த ஒரு உயிரினத்தையும் வாழ விடாது. பறவைகள் வந்து கூடடையாது. தினம் தினம் ரப்பர் பாலை சொட்டிக் கொண்டு, பாலுக்காக அறுத்த காயங்களைக் கொண்டிருக்கும் ரப்பர் மரங்கள் ராணுவ வீரனைப் போல் அமைதியாக நின்று கொண்டிருக்கின்றன. நம் மண்ணுக்கான மரமில்லை, மற்ற மரங்களைப் போல நீரைச் சேமிப்பதில்லை."

***************

பொன்னுப் பெருவட்டர் படுக்கையில் இருக்கிறார். வாழ்ந்து முடித்த இந்த  தள்ளாத வயதில், இன்னொருவரின் உதவியோடு உயிர் வாழ்வதில் பெரும் கோபம் கொண்டவராக இருக்கிறார். முதுமையில், படுக்கையில் படுத்த பின்னர் எல்லா வயதானவர்களுக்கும் கோபம் வருவதுண்டு. ஒவ்வொன்றுக்கும், மற்றவர்களை எதிர்பார்த்திருக்க வேண்டியது ஒரு சுமை. இந்தக் கணமே, தான் இந்த உலகத்தை விட்டுச் சென்று விடலாகாதா என எண்ணுகிறார். தன்னைப் பார்த்துக்கொள்ளும் குஞ்ஞியிடம், விஷம் குடுத்து விடு என்று வேண்டுகிறார்.

இந்த வீடு, இந்த ரப்பர்  தோட்டம் எல்லாம் பொன்னுப் பெருவட்டரின் காலத்தில் அவரே உருவாக்கியது. வெறும் காடாக இருந்த அந்த நிலத்தில், ரப்பர் மரம் பயிரிட்டார். கொஞ்சம் கொஞ்சமாக செல்வம் அவரைத் தேடி வந்தது. இப்பொழுது ஊரில் பெரிய பணக்காரக் குடும்பம் பெருவட்டர் குடும்பம். பெரியவரின் மகன் செல்லையாப் பெருவட்டர், சொத்துக்களை நிர்வாகம் செய்து வருகிறார். பேரன்கள் பிரான்சிஸ் மற்றும் லிவி.



செல்லையாப் பெருவட்டர், சில தொழில் முயற்சிகளில் கடன் பட நேர்கிறது. தன் தந்தை காலத்தில் சேர்த்து வைத்த சொத்துக்கள், எப்பொழுது வேண்டுமானாலும் விற்கப்படக் கூடும் என்று எண்ணுகிறார். பெரியவர் அதற்குள் இல்லாமலானால், இலகுவாக சொத்துக்களை விற்று விடலாம் என்று நினைக்கிறார் செல்லையாப் பெருவட்டர்.

மருமகள் திரேஸ் அழகி. அவளின் பழைய காதல், ஒரு அழகிய பகுதி கூட. ஆனால், ஆடம்பரத்தை விரும்பும் அவள், அந்தக் காதலை நிராகரித்து, பெருவட்டார் குடும்பத்துக்கு மருமகளாகிறாள்.   திரேஸ் மேல் லிவி கொஞ்சம் அன்பாக இருந்தாலும், பிரான்சிஸ் அவளை முற்றிலும் வெறுக்கிறான். அவளின் கேட்ட சகவாசம் தனக்குத் தெரியும் என்று அவளிடம் சொல்கிறான். மனைவியை, எதிர்க்க முடியாதவராக செல்லையாப் பெருவட்டர். 

அந்தக் காலத்தில் பெரிய பரம்பரையாக இருந்த அறைக்கல் குடும்பத்தைச் சேர்ந்த தங்கம் என்னும் பெண் அவர்களின் வீட்டில் வேலை செய்து வருகிறாள். பெருவட்டரின் பேரன் லிவியால் அவள் கர்ப்பமாகிறாள். அதனால், தங்கம் தற்கொலை செய்து கொள்கிறாள். சொத்துப் பிரச்சினை, தங்கம் தற்கொலை என எதையும் பெரியவரிடம் சொல்வதில்லை.

இவர்களைப் போலில்லாமல், ஒரு தனி அடையாளமாக பிரான்சிஸ் நாவலில் வருகிறான். பெரிய பெருவட்டருக்கும் இவன் மேல் பாசம் அதிகம். குடி, தகாத உறவுகள் என அவன் இருந்தாலும், ஏதோ ஒன்றுக்கு கட்டுப்பட்டவன் போல நியாயத்தின் பக்கமே நிற்கிறான். இந்த சொத்துக்களை எல்லாம் இழந்தாலும் பரவாயில்லை, நிம்மதியாக இருந்தால் போதும் என நினைக்கிறான். அம்மா திரேசுடன், லிவியும் சேர்ந்து சொத்துக்களை விற்க வழக்கறிஞரை போய்ப் பார்த்ததை அறிந்து அவர்களைத் திட்டி அடிக்கிறான்.



படுக்கையில் இருக்கும் பெருவட்டரைப் பார்க்க வருகிறார் கங்காணி.  பெரியவர் கங்காணியும், பெரிய பெருவட்டரும் பழைய நண்பர்கள். இந்த நிலத்தில் ஒன்றாக வேலை செய்தவர்கள். இவ்வளவு வயதாகியும், நடமாடிக் கொண்டிருக்கும் கங்காணியைப் பார்த்ததும், அவரைப் போல தான் இருக்க முடியவில்லையே என ஏங்குகிறார் பெருவட்டர்.கங்காணியின் பேரன் லாரன்ஸ், ஒரு மருத்துவர். பெருவட்டருக்கு வைத்தியம் பார்க்க, ஒரு முறை சென்றிருக்கிறான்.

லாரன்ஸ் சில சமூக சேவைகளில் ஈடுபடுவதாகவும், முக்கியமாக ரப்பர் மரங்கள் பற்றிய தீமைகளை அறியாமல் அதைப் பயிரிட்டு வளர்த்து வரும் மக்களிடம், ரப்பரின் தீமைகள் பற்றிச் சொல்லப் போவதாக, பிரான்ஸிடம் தெரிவிக்கிறான். அவர்களுடன் இணைந்து தானும் செயல்படப் போவதாக பிரான்ஸ் அவர்களிடம் சொல்கிறான். பெரிய பெருவட்டரும், தன்னைப் பார்த்துக்கொள்ளும் குஞ்ஞிக்கென, ஒரு இடத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார்.

***************

நம் நாட்டு மரங்கள் நிறைந்த காடுகளை அழித்து, ரப்பர் பயிரிட்ட பொன்னு பெருவட்டரிடம் கதை ஆரம்பித்து, ரப்பர் தோட்டங்களை அழிக்க நினைக்கும் அவரின் பேரன் பிரான்சிடம் வந்து முடிகிறது நாவல்.

Friday, July 25, 2014

ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகா

வேளாண்மையில் நிலத்தை உழ வேண்டியது முக்கியம். அப்பொழுதுதான் நிலம் பண்பட்டு, நல்ல விளைச்சலைத் தரும். ஆனால்,  ஒரு நிலத்தை உழுது 25 வருடங்கள் ஆகின்றன. அதில் வரும் விளைச்சல், மற்ற எந்த உயர்தர பண்ணைகளைக் காட்டிலும் அதிகம். அதெப்படி, நிலத்தை உழாமல் விளைச்சல் எடுக்க முடியும்?. இயற்கை முறையில், தன் பண்ணையில் இருபத்தைந்து வருடங்களாக நிலத்தை உழாமல், பயிரிட்டு வருவதாகச் சொல்கிறார், 'ஒற்றை வைக்கோல் புரட்சி' புத்தகத்தின் ஆசிரியர் மசானபு ஃபுகோகா.

***********

நிலத்தை உழுது, உரங்களைக் கொட்டி, வீரியமிக்க விதைகளை விதைத்து, பூசிகொல்லிகளைத் தெளித்து நாம் செய்யும் விவசாயம் மிகக் கேடானது. அப்படி வேலை செய்து, பயிரிட்டாலும் மிஞ்சுவதோ ஒன்றுமில்லை. 'உழுகிறவன் கணக்குப் பார்த்தால், உழக்கு கூட மிஞ்சாது' என்று சொல்வார்கள் ஊரில். இவ்வளவு செலவழித்து, விவசாயம் பார்த்தால், வருமானம் என்பது சொற்பமே. இயற்கை முறையில், குறைந்த செலவில் விவசாயம் பார்க்கலாம் என்றாலும்.. அது சரிப்பட்டு வருமா என்ற தயக்கம் இருக்கும். வேளாண்துறை விஞ்ஞானிகளும், அறிஞர்களும் ரசாயனம், பூச்சிகொல்லி மருந்துகள் என பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் சொல்வதை விடுத்து, விவசாயம் செய்தால் என்ன ஆகும் என்ற பயம் இருக்கும்.

இயற்கை முறை விவசாயத்தில், நாம் நுழைவதற்கு தடையாக இருப்பது அந்த பயமே. ஆனால், நம்மாழ்வார் போன்ற சில ஆசான்கள் நமக்கு வழிகளைக் காட்டுவார்கள். நடக்க வேண்டியது நாம்தான்.  அப்படி ஒரு ஆசான்தான், ஜப்பானைச் சேர்ந்த மசானபு ஃபுகோகா அவர்கள்.


இளம் வயதில், தாவரங்களில் வரும் நோய்களைக் கண்டறியும் ஆய்வுகளில் பணி செய்திருக்கிறார். இயற்கை முறை விவசாயம் மீது நாட்டம் கொண்டு, தன் தந்தையின் ஆரஞ்சுப் பழத் தோட்டத்தில் இயற்கை முறையைப் புகுத்துகிறார். ஆனால், ஒரே மாதிரியான உரங்கள், பூச்சிக் கொல்லிகள், பயிர் வளர்ப்புக்கு பழக்கப்பட்ட அந்த மரங்கள் பட்டுப் போகின்றன. அவரின் தந்தை, இது சரிப்பட்டு வராது எனச் சொல்ல, மீண்டும் ஆய்வு வேலைக்கே செல்கிறார்.

இயற்கை முறை விவசாயம் மீதான ஆர்வம் தணியாமல் இருக்க, எட்டு வருடங்கள் கழிந்து மீண்டும் தன் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்கிறார் ஃபுகோகா. அதன் பின்னர், எந்த ஒரு நவீன முறைகளைப் பின்பற்றும் உயர்தர பண்ணையைக் காட்டிலும், அவரின் பண்ணையில் விளைச்சல் அதிகரிக்கிறது. அவரின் பண்ணையைத் தேடி வந்து, அங்கேயே அவருடன் தங்கி இளைஞர்களும், விவசாயிகளும் கற்றுக்கொள்கிறார்கள்.



***********

இயற்கை விவசாயத்துக்கு முக்கியமான நான்கு அடிப்படை விதிகளைச் சொல்கிறார்;

1. நிலம் உழப்படக் கூடாது

நிலத்தை எப்பொழுதும் உழவே கூடாது. நிலத்தை உழும்பொழுது, மேல் மட்டத்தில் உள்ள மண்புழுக்கள், நுண்ணியிரிகள் கொல்லப் படுகின்றன. மண்ணின் அடியில் உள்ள சில களைப் பூண்டுகள், மேலே வந்து களைகளும் பெருகுகின்றன. நிலத்தை உழுவது என்பது, அந்நிலத்தை மேலும் கெடுப்பதே என்கிறார் ஃபுகோகா.

2. உரங்கள்

உரங்கள், இரசாயனங்கள் அன்றி வேறில்லை. அவற்றை முதலில் பயன்படுத்தும் பொழுது, விளைச்சல் அதிகரித்தாலும், ஒவ்வொரு முறையும் உரங்களை அதிகப்படுத்த வேண்டும். செலவும் ஏறிக்கொண்டே போகும். மண்ணின் தரமும் கெட்டு, சூழலையும் கெடச் செய்கின்றன உரங்கள்.

3. களைகள்

நிலத்தை உழாமல் இருப்பதன் மூலம் பாதிக் களைகள் கட்டுப்படும். மீதி இருப்பதை, வைக்கோல்களைப் பரப்புவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கும் களைகள் நமக்கு பெரிய பிரச்சினை இல்லை. வழக்கமாக,  களை எடுத்தல் என்பது மிகவும் செலவு வைக்கக் கூடியது. அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனச் சொல்கிறார் ஃபுகோகா.

4. பூச்சிக்கொல்லிகள்

இயற்கைக்கு ஓர் சமன்நிலை உண்டு. ஓர் உயிர் பெருகும்போது, அதை உண்ண இன்னொரு உயிர் உண்டு. அது ஒரு சங்கிலி போன்றது. [ஒரு சமயம் எங்கள் வீட்டில் வளரும் வாழை மரங்களில், பச்சைப் புழுக்கள் பெருகி இலையை மடித்து வளர்ச்சியைப் பாதித்தன. ஆனால் குருவிகள், அதைக் கொத்தி கொத்தி தனக்கு உணவாக்கிக் கொண்டன. எந்த மருந்தும் தெளிக்காமல், அவைகள் மறைந்து விட்டன] நாம் ஒரு பூச்சியைத் தடுக்க, இன்னொரு பூச்சி பெருகி விடும். இவ்வாறு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவது, காலப்போக்கில் சூழலை மிகவும் கெடுத்துவிடும் என எச்சரிக்கிறார் மசானபு ஃபுகோகா.

***********

வைக்கோலும், களிமண் உருண்டைகளும்

இவரின் இயற்கை முறை வேளாண்மையில், முக்கிய இடம் வகிப்பது வைக்கோல். அறுவடை செய்த பின்னர், அந்த வைக்கோலை அதே நிலத்தில் அப்படியே பரவலாகப் போட வேண்டும். இதனால் களைகள் கட்டுப்பட்டு, வைக்கோல் மக்கி கரிம உரமாக மாறிவிடும். ஒவ்வொரு பயிர் சுழற்சியின் போதும் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்கிறார். இன்று அவரின் நிலத்தில், மண் மிகுந்த வளத்துடன் உயர்ந்துள்ளது.  விதைகளை அப்படியே தூவாமல், ஒரு சிறு களிமண் உருண்டையில் பொதிந்து தூவ வேண்டும் என்கிறார். இதனால், எலி போன்ற விலங்குகள் விதைகளை நாசப்படுத்துவதும் குறைந்து, முளைக்கும் திறனும் அதிகரிக்கும் என்கிறார்.

இயற்கை வேளாண் பொருட்களின் விலை

சந்தையில் இயற்கை முறையில் விளைவித்த பொருட்கள், மற்ற பொருட்களைக் காட்டிலும் விலை அதிகம் தான். இயற்கை முறையில் பயிரிடுவது என்பது, மிகுந்த செலவன்றியும், குறைந்த உழைப்புடனும் செய்யப்படுவதால் விலை குறைவாகக் கிடைக்க வேண்டும் என்பது என் கருத்து என்கிறார் ஃபுகோகா.



ஒற்றை வைக்கோல்

மசானபு ஃபுகோகா சொல்கிறார்;
"இந்த மலைக்குடிலுக்கு வரும் இளைஞர்களுக்கு நடுவே, உடலாலும், மனதாலும் சோர்ந்து போன, அனைத்திலும் நம்பிக்கை இழந்த சிலரும் வருவதுண்டு. அவர்களுக்கு ஒரு சோடிக் காலணிகள் கூட வாங்கித் தருவதற்கு சக்தியற்ற இந்த வயதான விவசாயிடம் அவர்களுக்கு கொடுப்பதற்கு ஒன்றே ஒன்றுதான் உள்ளது.

ஒரே ஒரு வைக்கோல்!

இந்த ஒற்றை வைக்கோலில் இருந்து ஒரு புரட்சியைத் தொடங்கலாம். "
***********

இதோ அந்த வயதானவரின் கைகளில், அந்த ஒற்றை வைக்கோல். மசானபு ஃபுகோகா - விடமிருந்து, அந்த ஒற்றை வைக்கோலைப் பெற நாம் முன் வர வேண்டும்.

இந்தப் புத்தகத்தில், இயற்கை முறை விவசாயம் மட்டுமில்லை.. தத்துவம், உணவுமுறை, உடல் நலம் என அனைத்தையும் பற்றிப் பேசுகிறார் மசானபு ஃபுகோகா. 
படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம்.
***********
ஒற்றை வைக்கோல் புரட்சி
ஆசிரியர்: மசானபு ஃபுகோகா
தமிழில்: பூவுலகின் நண்பர்கள்
எதிர் வெளியீடு
படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி