சிப்பாய் கலகத்தின் போது இறந்த ஐரிஷ் பெற்றோரின் ஆண் குழந்தையை தம்பதிகளான கிருஷ்ணதயாளும், ஆனந்தமாயியும் எடுத்து வளர்க்கிறார்கள். குழந்தை இல்லாத காரணத்தால் அவனை வளர்த்து கோர்மோகன் பாபு என்ற பெயரும் வைக்கிறார்கள். சுருக்கமாக கோரா. பிராமண குடும்பம் என்பதால் முதலில் எந்த ஆச்சாரமும் பார்க்காத கிருஷ்ணதயாள் கோரா வளர வளர எல்லாச் சடங்குகளையும் கடைபிடிக்கிறார். ஆனந்தமாயி அதற்கு எதிராக எல்லாச் சடங்குகளையும் விட்டுவிட்டு, மனிதர்களே முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார்.
கோராவுக்கு அவர்கள் தன் பெற்றோர் அல்ல என்பது தெரியாது. கோரா நல்ல உயரமும், ஆங்கிலேய நிறமும் கொண்டு விளங்குகிறான். தன் அம்மாவுக்கு நேர் மாறாக அவன் இந்து சமய சடங்குகளை கடை பிடிக்கிறான். மற்றவர்களையும் அவன் தனது கொள்கைகளை விளக்கி ஒப்பு கொள்ள வைக்கிறான். அதற்காக அவன் மற்ற சாதி மக்களை ஒதுக்கி வைப்பதில்லை. அவர்களின் நிலைமை முன்னறேவும் விரும்புகிறான். தன் நாட்டு மக்களை யாரேனும் இழிவு செய்தால் கோரா கோபம் கொள்கிறான். தன் கருத்துகள் பற்றி இதழ்களில் கட்டுரைகளும் எழுதும் கோராவுக்கு நிறைய நண்பர்களும் அவனைப் பின்பற்றும் சிறு கூட்டமும் உண்டு.
கோராவின் அம்மாவுக்கு லச்சுமியா என்ற பெண் பணிவிடை செய்து வருகிறாள். அப்பெண் வேறு சாதி என்பதால் கோரா தன் அம்மாவின் அறைக்குச் சென்று உணவு அருந்துவதில்லை. தண்ணீர் கூட குடிக்க மாட்டான். இத்தனைக்கும் அவனை சிறு வயதில் இருந்து வளர்த்தவள்
லச்சுமியா .ஆனந்தமாயிக்கு அதைப் பற்றிய வருத்தம் இருந்தாலும் பின்னர் சரியாகிவிடும் என நினைக்கிறாள். கோராவின் அம்மா ஆனந்தமாயி ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்; "சாதி முக்கியம் என்று நான் நினைத்திருந்த காலத்தில், அந்த சாதியின் பழக்க வழக்கங்களையும், ஆச்சாரங்களையும் கடை பிடித்தேன். சாதியை விட மனிதர்களே முக்கியம் என பின்னர் நான் உணர்ந்து விட்டேன். அதனால் இப்பொழுது என்னால் யார் கையால் கொடுத்த உணவுகளையும் சாப்பிட முடியும். ஈஸ்வரனின் அன்பையும் கருணையையும் மட்டுமே நான் நம்புகிறேன். சாதியை அல்ல."
கோராவுக்கு பினய் என்றொரு நண்பன் உண்டு. சிறு வயதில் இருந்தே பழக்கம் என்பதால் மற்ற எல்லோரையும் விட ஒருபடி மேலாக இருவருமே நட்பாக இருக்கிறார்கள். பினய்க்கு பெற்றோர் இல்லை. உறவினர்களும் அவனுடன் இல்லை. பெற்றோர் இல்லாத பினய்க்கு கோராவும், ஆனந்தமாயி அம்மாவும் உறவுகளாக இருக்கிறார்கள். கோராவும், பினயும் இந்துக்கள் என்றாலும் இருவருமே இருவேறு பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள். கோரா பின்பற்றும் ஆசாரங்களை பினய் பின்பற்றுவதில்லை. மேலும் எல்லோருடனும் எளிதில் பழகும் குணம் பினய்க்கு உண்டு. தன்னை பெறாத தாயாகவே ஆனந்தமாயி அம்மாவை அவன் எண்ணுகிறான். தன் மகன் கோரா தன்னுடன் உணவு உண்ணுவதில்லை என்ற குறையை ஆனந்தமாயிக்கு பினய் தீர்த்து வைக்கிறான். அவளின் அறையில் உணவு உண்ணுவதில் அவனுக்கு எந்த சங்கடமும் இல்லை. கோராவின் வீட்டில் பினயும் ஒருவனாகவே இருக்கிறான்.
தனது வாரிசு இல்லை என்ற உண்மையை கோராவிடம் சொல்லிவிடலாம் என்று ஆனந்தமாய் சொல்லும்போது, எனக்கு பிரச்சினைகள் வரலாம் என்று சொல்கிறார் கிருஷ்ணதயாள். அவரின் பென்சன் நிறுத்தப்படக் கூடும், மேலும் இன்னொருவரின் குழந்தையை எடுத்து வளர்த்து அதை அரசிடமோ, காவல் துறையிடமோ சொல்லாததால் இன்னல்கள் நேரும், தாக்குப்பிடிக்க முடியும் வரை பார்ப்போம் முடியவில்லை என்றால் என்றாவது ஒருநாள் கோராவிடம் உண்மையை சொல்லிவிடலாம் என்கிறார்.
க்ரிஷ்ணதயாளின் முன்னாள் நண்பரான பொரேஷ் பாபு குடும்பத்துக்கும் பினய்-கோராவு க்கும் பழக்கம் ஏற்படுகிறது. பொரேஷ் பாபு குடும்பம் பிரம்ம சமாஜத்தை பின்பற்றுகின்றனர். அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். மனைவியின் பெயர் பரதசுந்தரி. மேலும் அவரின் இறந்து போன இந்து நண்பரின் பிள்ளைகள்
சுசாரிதா, சதீஷ் ஆகிய இருவரை அவர் வளர்த்து வருகிறார். சதீஷ் சிறுவன். எல்லோருக்கும் மூத்தவளான சுசாரிதா அந்த வீட்டில் எந்த பாகுபாடும் இல்லாமல் இருக்கிறாள். அவளை பிரம்மோ சமூகத்தைச் சேர்ந்த ஹரன் பாபுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறாள் பரதசுந்தரி.
பொரேஷ் பாபு, ஆனந்தமாயி, பினய், சுசாரிதா, லொலிதா போன்றோர் அனைத்து மக்களும் நம் சொந்தங்களே, நமக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை என நினைக்க, பரதசுந்தரி, ஹரன், ஹரிமோகினி போன்றோர் சாதிக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கோரா இதில் கொஞ்சம் வித்தியாசப்படுகிறான். தனது சாதியின் ஆசாரங்களை பிறழாமல் கடைபிடிக்கும் அதே வேளையில், அடுத்தவரின் துன்பங்களை புரிந்து கொள்ளவும், நாடு சுதந்திரம் பெற்று எல்லோரும் மேன்மை அடைய வேண்டும் என விரும்புகிறான். கிராமம் கிராமமாகச் சென்று ஏழை மக்களைச் சந்திக்கிறான். ஏழை இளைஞர்களை காவலர் அடிப்பதைப் பார்த்து, சண்டைக்கு போகிறான். பின்னர் அதே பிரச்சினையில் நீதிபதி சிறை தண்டனை விதிக்கவும் தயங்காமல் அதை ஏற்றுக்கொள்கிறான். உண்மையும், நேர்மையுமே தனக்கு அழகு என்று எங்கேயும் தலை நிமிர்ந்து நிற்கிறான் கோரா.
பினய்-லொலிதா காதலால் பிரச்சினைகள் வருகின்றது. ஆனால் இருவருமே தமது சமூக பழக்க வழக்கங்களை மதித்து மதம் மாற முடியாதென தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு எதிர்ப்பும் வலுக்கிறது. கோரா கூட அந்த திருமணத்தை எதிர்க்கிறான். இதற்கிடையில் ஹரிமோகினி என்னும் பெண் சுசாரிதாவுக்கு பெரியம்மா என கூறிக்கொண்டு வருகிறாள். ஹரிமோகினியால் பொரேஷ் பாபுவின் வீட்டில் இருந்து தனியே வருகிறாள் சுசாரிதா. ஹரிமோகினி இந்து ஆச்சாரங்களை வன்மையாக கடைபிடிக்கிறாள். எங்கே சுசாரிதா கோராவின் மேல் காதல் கொண்டு கல்யாணம் செய்து விடுவாளோ என்று பயந்து தனது கணவனின் வழியில் ஒரு வரனை பார்த்து வைக்கிறாள். அவளின் திட்டங்களுக்கு சுசாரிதா மறுப்பு தெரிவிக்கிறாள்.
கோரா-சுசாரிதா காதல் நேரடியாக இருவருமே தெரிவிக்காவிட்டாலும், சுசாரிதா கோராவை ஒரு குருவாக நினைத்திருக்க, தனது வழியை பின்பற்றும் சிறந்த பெண்ணாக கோரா நினைக்கிறான்.
ஒரு துறவியாக செய்யக்கூடிய சடங்குகளை கோரா ஒரு விழாவின் மூலம் நடத்த நினைக்கிறான். ஆனால் கிருஷ்ணதயாள் அவனை செய்ய வேண்டாம் என்கிறார். அவன் திருப்பி ஏன் என்று கேட்க, சொன்னால் உனக்கு புரியாது அதை விட்டு விடு என்கிறார். சடங்கு செய்ய கொஞ்ச நேரம் இருக்கும்போது
கிருஷ்ணதயாள் மயக்கமாகி உடல்நிலை கெட்டு கோரா பற்றிய உண்மைகளைச் சொல்லிவிடுகிறார். கோரா திகைத்து நிற்கிறான்.
பின்னர் கோரா தன்னை ஒரு சீடனாக ஏற்றுக்கொள்ளுமாறு பொரேஷ் பாபுவிடம் கேட்கிறான். எல்லோருடைய சமூக வழக்கங்களுக்கும் மரியாதை கொடுக்கும் அவரை விட சிறந்த குரு அமைய மாட்டார் எனச் சொல்கிறான் கோரா. ஆனந்தமாயி அம்மாவின் அறைக்கு வரும் கோரா, 'நான் வெளியில் தேடிய தெய்வம் எனது வீட்டிலேயே இருந்திருக்கிறது. அத்தெய்வம் நீங்கள் தான் அம்மா. லட்சுமியாவை அழைத்து ஒரு குவளை தண்ணீர் எனக்கு கொண்டு வரச் சொல்லுங்கள்' என்கிறான்.
கோரா - இரவீந்திரநாத் தாகூர்
தமிழில்: கா.செல்லப்பன்