Tuesday, December 23, 2025

மிளகு - நாவல் - இரா.முருகன்

போர்ச்சுகல் அரசால் மிளகு ராணி என்று போற்றப்பட்ட அரசி  சென்னபைராதேவி , 54 வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருந்திருக்கிறார். மிளகுக்கும் நறுமணப் பொருட்களுக்கும் பெயர் பெற்ற கொங்கன் பிரதேசமான கெருசோப்பா, ஹொன்னாவர் பகுதியை ஆண்டவர் ராணி சென்னா. கேரளாவின் கோழிக்கோடு தொடங்கி கோகர்ணம் மற்றும் கோவா வரை கடலை ஒட்டிய மலைப் பிரதேசங்களில் மழை பெய்து வளமான மண்ணில் மிளகு தாராளமாக விளைச்சல் கொடுத்திருக்கிறது. இப்பொழுது அந்த பகுதிகளுக்கு சென்றாலும் பசுமை நிறைந்த மிளகு தோட்டங்கள் காணக் கிடைக்கின்றன. நவீன காலத்தில் மனிதன் அழித்தது போக மீதி இருப்பதை நாம் பார்க்கும்போது , அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணம் தோன்றும். 


தரமும், மணமும் நிறைந்த மிளகு போன்ற பொருட்களுக்கு வேண்டியே அந்தப் பகுதிகள் மீது தொடர்ந்து மற்ற நாடுகளின் தாக்குதல் இருந்திருக்கிறது. அதைத் தடுக்க விஜயநகரப் பேரரசுடன் இணைந்து ஆட்சி செய்கிறார் சென்னபைராதேவி. சமண மதத்தைத் தாய் மதமாக கொண்டவர் சென்னா. திருமணம் செய்துகொள்ளாத ராணி சென்னா, தன்னுடைய சொந்தத்தில் நேமிநாதன் என்பவனை வளர்ப்பு மகனாக வளர்க்கிறார். அவனுக்குத் திருமணமாகி ரஞ்சனா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உண்டு.  இளவரசனாக இருந்தாலும் நீண்ட ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ராணியைத் தாண்டி அவனால் எதுவும் செய்ய முடிவதில்லை. ராணியை வீழ்த்தி ஆட்சி கட்டிலில் அமர எதிரிகளுடன் சேர்ந்து சில திட்டங்கள் தீட்டுகிறான். 


பக்கத்துக்கு நாடுகளை அரசு ஆண்டு வருபவர்களான உள்ளால் பகுதியின் ராணி அப்பக்கா, கோழிக்கோடு அரசர் சாமுதிரி என எல்லோருமே சென்னபைராதேவி மேல் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். போர்ச்சுகல் நாட்டின் அரசுப் பிரதிநிதி பெத்ரோ என்பவர் அவர்களிடம் மிளகு வர்த்தகம் தனியாக செய்ய  பேசிப்பார்க்கிறார். ஆனால் சென்னாவைக் கேட்காமல் ஒரு மிளகையும் எங்களால் விற்பனைக்கு கொடுக்க முடியாது எனச் சொல்லி விடுகிறார்கள். 

போர்ச்சுகல் நாட்டின் ராணுவத்தில் இருந்த தனது கணவனின் இறப்புக்கு காரணமான ராணி சென்னாவை பழி வாங்க ஹொன்னாவர் பகுதிக்கு வருகிறாள் ரோகிணி. இந்தோ - போர்த்துக்கல் தம்பதிக்கு பிறந்த ரோகிணி, திருமணத்திற்கு பின்னர் போர்ச்சுகல் நாட்டில் வசித்து வந்தாள்.  சமையல் செய்வதிலும், இனிப்புகள் செய்வதிலும் ஆர்வமுடைய ரோகிணி ஹொன்னாவரில் ஒரு இனிப்புக்கடையை ஆரம்பிக்கிறாள். அவளுக்கு கடையை நடத்துவதைக் காட்டிலும், ராணியை பழிவாங்க வேண்டியதே முதன்மை காரணம் என்பதால் ராணியின் வளர்ப்பு மகன் நேமிநாதனை தன் வலையில் விழவைக்கிறாள். நேமிநாதனை விட மூத்தவளாக இருந்தாலும், அவளின் காமத்தில் மூழ்கி அவள் சொல்வதைக் கேட்கிறான் நேமிநாதன்



அரசாங்க மருத்துவரான வைத்தியநாத், அவரின் மனைவி மிங்கு மற்றும் பெத்ரோ மாளிகையில் வேலை செய்யும் கஸாண்ட்ரா என நாவலில் சில பாத்திரங்கள் மறக்க முடியாதவை. நாவலில் 400 வருடங்களுக்கு முற்பட்ட கதையை சொல்லும்போதே கூடவே இப்பொழுது இருக்கும் நான்கைந்து குடும்பங்களைப் பற்றிய கதையும் வருகிறது. அம்பலப்புழையில் உணவகம் நடத்தி வரும் திலீப், அவரின் தந்தையான பரமனுக்கு திதி கொடுக்கிறார். திதி கொடுத்த அன்று 100 வயதுக்கும் மேலான ஒரு பெரியவர் நான்தான் உன் அப்பா என்று திரும்பி வருகிறார். அவர் சொல்லிய நினைவுகள் மூலம் அது தன் அப்பா தான் என்று முடிவு செய்து தன்னுடனே தங்கி கொள்ளச் செய்கிறார். இவருக்கு நினைவுகள் பின் திரும்பி 400 வருடங்களுக்கு முன்பு ரோகிணி கடையில் சமையல் செய்யும் மடையராக சேர்ந்து கொள்கிறார். அவரின் நினைவுகள் பின்னாடி சென்றும் பின்னர் நிகழ்காலத்துக்கு வந்தும் ஊசலாடுகிறது. 

பரமன் பழைய காலத்தில் ரோஹிணியைத் திருமணம் செய்து கொள்கிறார். அவளுக்கு நேமிநாதனுடன் இருந்த பழக்கத்தால் மஞ்சுநாத் என்ற குழந்தை பிறக்கிறான். அந்தக் குழந்தைக்கு அப்பா என்று காட்டவே பரமனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் ரோகிணி. சென்ற காலத்தில் மஞ்சுநாத்துக்கு தந்தையாகவும், நிகழ் காலமான இப்பொழுது திலீப்புக்கு தந்தையாகவும் இருக்கிறார் பரமன். முன்பும் பின்பும் என நினைவுகளில் மூழ்கியபடியே இருக்கிறார் பரமன். 

திலீப்பின் மகளான கல்பனா, அவர்களின் குடும்ப நண்பரான சாரதா தெரிசா என்பவரின் மகன் மருதுவைக் காதலிக்கிறாள். கல்பனா லண்டன் செல்லும்போது அங்கே தங்கி இருக்கும் பிஷாரடி என்னும் பேராசிரியர், மருதுவின் குடும்பம் என சந்திக்கிறாள். மருது ஆன்லைனில் மிளகு வர்த்தகம் செய்கிறான். எல்லோருடைய தொடர்பிலும் மிளகு ஒரு மறைபொருளாக இருக்கிறது. சாரதா தெரிசா அங்கே கல்யாணம் செய்து கொண்ட முசாபர் என்பவரை விவாகரத்து செய்து விடுகிறாள். விவாகரத்து செய்தாலும் அவரிடம் பேச்சுவார்த்தை உண்டு. மருதுவின் உண்மையான தகப்பன் இந்தியாவில் இருக்கிற சங்கரன் என்பவர். அவருக்கு இங்கே ஒரு பெண் குழந்தையும், வசந்தி என்கிற மனைவியும் உண்டு. ஒரு விமானக் கடத்தலில் மாட்டிக் கொண்ட அவரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சாரதா இந்தியா வருகிறாள். சங்கரனுக்கு அதற்கு பின்னர் உடல் நிலை பிரச்சினைகள் ஆரம்பிக்கிறது.  கேரளாவில் உள்ள சில கோவில்களுக்கு செல்ல வேண்டும் எனச் சொல்ல எல்லோரும் அம்பலப்புழையில் சந்திக்கிறார்கள். 

ராணி சென்னாவின் இறுதிக் காலங்கள் சிறப்பாக இல்லை. 54 ஆண்டுகள் ஆண்ட அவருக்கு மக்களின் ஆதரவும் குறைகிறது.  போர் நெருங்குவதால் வியாபாரிகளும், செல்வந்தர்களும் தங்கள் செல்வத்தை வீட்டில் புதைத்து விட்டு மேலே பேய் மிளகை விதைத்துக் கொண்டு வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். பேய் மிளகு ஒரே நாளில் ஒரு வீட்டை மூழ்கடிக்க கூடிய தாவரம் என நாவலில் சொல்லப்படுகிறது. வளர்ப்பு மகன் நேமிநாதன் கெலடி அரசர் நாயக்கர் தலைமையில் படை திரட்டிக் கொண்டு மிர்ஜான் கோட்டையை முற்றுகையிடுகிறான். ராணி மக்களிடம் வீட்டுக்கு ஒருவர் வாளேந்தி வாருங்கள் எனச் சொல்கிறாள், ஆனால் ராணியின் பேச்சை யாரும் சட்டை செய்வதில்லை. இரு தரப்பிலும் இழப்புகள் இருக்கின்றன.  

கோட்டையை கைப்பற்ற போகும் முந்தைய தின மாலையில், நேமிநாதன் 'போருக்கு வந்து உதவி செய்ததற்கு நன்றி, நீங்கள் செல்லலாம்' என கெலடி அரசரிடம் சொல்ல இதற்காகவா நாங்கள் வந்தோம் எனக் கூறி அவனைக் கொன்று விடுகிறார்கள். நேமிநாதன் இறப்பின் பின்னர், ராணி சென்னபைராதேவி கைது செய்யப்பட்டு கெலடி அரசரின் மாளிகையில் சிறை வைக்கப்படுகிறாள். முதுமையும், நம்பிக்கை மோசடி செய்தவர்களையும் நினைத்து ராணி சில வருடங்களில் இறந்து போகிறார். தன்னுடைய இளவயதில் காதலித்து மதுரைக்கு சென்று வருகிறேன் என்று சொல்லிச் சென்ற வரதன் என்பவனை திருமணம் செய்திருந்தால், காட்சிகளே மாறிப் போயிருக்கும் என நினைக்கிறாள் ராணி. கெருஸொப்பா மற்றும் ஹொன்னாவர் பகுதிகள் ஆட்சி மாற்றத்தால், மக்கள் இடப்பெயர்வும், புதியவர்களின் கொள்ளையடிக்கும் மனமும் சேர்ந்து  வளமிழந்து போகின்றன. 

ஹொன்னாவர், கெருசோப்பா பகுதிகளுக்கு பேராசிரியர் பிஷாரடி, சங்கரனின் குடும்பம், திலீப், அவரின் தந்தை பரமன் எல்லோரும் செல்கிறார்கள். அங்கே மிச்சமுள்ள மிர்ஜான் கோட்டை மற்றும் சமண ஆலயமான சதுர்முக பஸதி போன்றவற்றை பார்க்கிறார்கள். தாத்தா பரமனுக்கு நினைவுகள் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது. போன காலத்தில் மகனாக இருந்த மஞ்சுநாத் கூப்பிடுவது போல அவருக்குத் தோன்றுகிறது.

===

எழுத்தாளர் ஜெயமோகன் தனது கட்டுரையில் "வாசகன் ஓர் உழைப்பை அளித்து வாசிப்பதே நல்ல இலக்கியம். ஆனால் அந்த உழைப்பும் களிப்பூட்டுவதாக இருக்கவேண்டும். மிளகு அப்படிப்பட்ட நாவல்." என்று சொல்கிறார்.  மேலும், "இந்நாவலின் முதன்மை அழகு இதிலுள்ள  பல வகையான மொழிநடை. மொழிநடைகளாலான ஒரு கலைடாஸ்கோப் இந்நாவல். வெவ்வேறு நூற்றாண்டுகளின் பேச்சுமொழிகள், எழுத்துமொழிகள் கலந்து வருகின்றன. "  என்கிறார். 


Friday, December 5, 2025

வாராணசி - எம்.டி.வாசுதேவன் நாயர்

எப்பொழுதும் சிதை எரிந்து கொண்டிருக்கும் நகரம் வாராணசி. ஆனால் அதன் முகம் அது மட்டும் அல்ல. அமைதியையும், காமத்தையும் இன்னொரு முகமாக கொண்டிருக்கும் நகரம் வாரணாசி. பேராசிரியர் ஸ்ரீனிவாசன் என்பவரின் அழைப்பை ஏற்று வாரணாசி நகருக்கு செல்கிறான் சுதாகரன். சுதாகரன் அங்கே செல்லும் அந்த குறிப்பிட்ட தேதியின் முன்னரே பேராசிரியர் இறந்துவிடுகிறார். அங்கே சில நாட்கள் தங்கி இருக்கும்போது அவனுடைய கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறான்.


பெண்களுடன் சுதாகரனுக்கு எளிதில் தொடர்பு ஏற்படுகிறது. ஆனால் அந்த உறவுகளைத் தொடர இவன் விரும்புவதில்லை. எதற்கோ பயந்து தப்பித்துப் போகிறான். அதனை ஒருவாறு அந்தப் பெண்களும் அறிந்திருப்பார்கள் போல. இவன் விட்டுவிட்டு போன பின்னர் அவர்கள் அவனைத் தேடுவதில்லை. தங்களது பயணத்தில் ஒரு சிறு இளைப்பாறல் போல அமைகின்றன அவனுடனான உறவுகள். வயதான காலத்தில், முன்னர் சிலநாட்கள் ஈருடல் ஓருடலாக பழகிய சுமிதாவை கங்கை கரையில் சந்திக்கிறான். அவளோ அவனை யாரோ ஒரு வழிப்போக்கன் என நினைத்து போகிறாள். உண்மையாகவே அவளுக்கு அவனை நினைவில் இல்லை. 




உறவுக்கார பெண் சௌதாமிணி, பத்திரிகை அடித்து கல்யாணம் வரை சென்ற காதலி கீதா, தன்னை விட மூத்தவரான திருமதி மூர்த்தி, வெளிநாட்டிலிருந்து ஆய்வுக்கு வந்த சுமிதா என அவன் பழகிவிட்டு தப்பித்து ஓடும் விலங்காகவே இருக்கிறான். எதையும் எதிர்கொள்ள அவனுக்கு தயக்கம். பிரான்ஸ் சென்று அங்கே ஒரு வெளிநாட்டு பெண்ணை மணக்கும் அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது . ஆனால் அவளோ அவனை விட்டுவிட்டு குழந்தையுடன் அமெரிக்கா சென்றுவிடுகிறாள். உண்மையில் இவ்வளவு உறவுகளை அவன் இழந்து விடுவதிலேயே நாட்கள் சென்று விடுகிறது. பாரிஸில் பிறந்த தன் மகன் தன்னுடன் இருப்பான் என நினைத்திருக்க, மனைவியோ அவனை விட்டுப் பிரிந்து போகிறாள். 


இதற்கு நேர் எதிராக மனைவியை இழந்த பின்னர் தனது பெண்ணுக்கு செவிலித் தாயாக வந்த ஒரு பெண்ணை நேசித்து தனது வாழ்வில் முக்கிய இடம் கொடுத்த மனிதராக பேராசிரியர் இருக்கிறார். தன்னுடைய இறப்புக்கு பின்பும் அவள் எந்த இன்னலும் இல்லாமல், தனது பிள்ளைகளால் எந்த கஷ்டமும் அனுபவிக்க விடாமல், உயில் எழுதி வைத்து அவளின் வாழ்க்கையை நடத்த அனைத்தையும் செய்துவிடுகிறார். அந்தப்பெண் அதை எதிர்பார்க்காமல் இருந்தாலும், தன்னால் முடிந்ததை ஒரு பரஸ்பர அன்பு போல செய்கிறார். சுதாகரனுடைய தப்பிப்போதல் இவரிடம் இல்லை. 


பேராசிரியரால் முடிந்ததை சுதாகாரனால் செய்ய முடிவதில்லை அல்லது அதற்கான மனத்திடம் இல்லை. போலவே இவன் குணத்தை அறிந்தே அவன் பழகிய பெண்கள் எல்லோரும் அவனிடமிருந்து தப்பித்து போகிறார்கள் என்பது உண்மையா?.


பேராசிரியர் ஸ்ரீனிவாசனுக்கு கங்கை கரையில் சுதாகரன் பிண்டம் அளிக்கிறான். அப்பொழுது புரோகிதர் தனக்கு தானே கூட பிண்டம் வைத்துக் கொள்ளலாம், அது ஆத்ம பிண்டம் எனச் சொல்கிறார். சுதாகரன் அதைச் செய்கிறான். 


வாரணாசி என்பது இறப்பை கொண்டாடும் நகரம். அது அங்கே ஒரு தொழிலும் கூட. சுதாகரனின் நண்பன் ஒருவன் சிதையை நிர்வகிக்கும் தொழிலில் இருக்கிறான். சிதைகளுக்கு விறகுகள் போடும் தொழிலை அவனுடைய குடும்பம் செய்து வருகிறது. இன்னொருவர் தனது இறுதி காலத்தில் அங்கே வந்து தங்கியிருக்கும் வயதானவர்களை பராமரிக்கும் ஆசிரமம் நடத்தி வருகிறார். 


இந்நாவல் மாறிமாறி வரும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டது. சுதாகரனின் நினைவுச் சிடுக்குகளுக்குள் அலைந்து சென்றாலும், இறுதியில் அது நிலைக்கு வருகிறது. இந்நாவலை தமிழில் வாசிக்க மொழிபெயர்த்த சிற்பி அவர்களுக்கு நன்றிகள். 

வாராணசி 

எம்.டி.வாசுதேவன் நாயர் 

தமிழில்: சிற்பி