Monday, May 2, 2011

தண்ணீர் - அசோகமித்திரன்



தண்ணீர். ஓர் அறிவுள்ள உயிரிலிருந்து எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் தண்ணீர் மட்டுமே. 'தண்ணீர்' நாவலின் முன்னுரையில் அசோகமித்திரன் அவர்கள்; 'வாழ்க்கையில் உன்னதமானதெல்லாம் இலவசம் என்ற பழமொழி அன்று உண்டு' என்று கூறுகிறார். இலவசமாக இருந்த தண்ணீர், வரி விதிக்கப்பட்ட பொருளாக மாறிய காலத்தில் நாம் இருக்கிறோம்.

நட்ட நடு இரவில் தண்ணீர் வரும். எழுந்து பிடித்து வைக்க வேண்டும். ஒரு வாரம் குழாயில் வரவில்லை என்றால், லாரி தண்ணி பிடிக்க வரிசையில் நிற்க வேண்டும். குடிப்பதற்கு சரி, மற்ற வேலைகளுக்கு; அதற்கு உப்புத் தண்ணீர். குடம் ஒரு ரூபாய் என வாங்க வேண்டும். பிடித்த தண்ணீரை சிக்கனமாக புழங்க வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையும் இருந்து, அந்த இடத்தில் வாடகைக்கு குடியிருப்போரின் நிலைமை, அதோ கதிதான். அதிலும் கோடை காலத்தில், தண்ணிக்கு வீதி வீதியாக குடங்களை தூக்கிக் கொண்டு போவததைத் தவிர வேறு வழியே இல்லை.

தண்ணீருக்கு அலைந்த கதைகளைச் சொன்னால் அதற்கு முடிவேயில்லை. அதிலும் சென்னை போன்ற மாநகரங்களில், எப்பொழுது தண்ணீர் வருமெனத் தெரியாத குழாய்; குடம் ஒரு ரூபாய் என விற்கும் வீட்டுக்காரர்கள்; காலிக் குடங்களை வாங்கிக் கொண்டு போய் காசுக்கு பொதுக் குழாயில் நிரப்பிக் கொண்டு வரும் வண்டிக்காரர்கள்; சாக்கடையும், குழாய் மேடையும் ஒன்றாகவே இருக்கும் பொதுக் குழாய்கள்; ஒரு குடம் தண்ணிக்கு அரை மணி நேரம் வரிசையில் நிற்பது; அங்கே வரும் நீ முந்தி, நான் முந்தி சண்டைகள்; கெட்ட வார்த்தைகள்; வரிசையில் நிற்கும் வயதானவர்களின் இயலாமை என, இந்த தண்ணீரைச் சுற்றிதான் எவ்வளவு பிரச்சினைகள். கிராமம், நகரம் என்று இல்லை. எல்லா ஊரிலும் தண்ணீர் பிரச்சினை சொல்லி மாளாது.

ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆனால், கடைகளில் ஒரு லிட்டர், ரெண்டு லிட்டர், நாப்பது லிட்டர் என பாட்டில்களில் அடுக்கி வைத்திருக்கிறார்கள். எங்கிருந்துதான் கிடைக்குமோ?.

நாவலைப் பற்றிச் சொல்ல வந்து, தண்ணீர் பிரச்சினைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நாவலில் முழுவதும் வருவதும், தண்ணீர் மற்றும் அதற்கு அலைவது தான். அதாவது நாவலின் கதைப் போக்கு வேறு என்றாலும், 'நீரின்றி அமையாது இந்த உலகு' போல தண்ணீரும் கூடவே வருகிறது.

ஜமுனாவும், சாயாவும் சகோதரிகள். ஜமுனா மூத்தவள், பாஸ்கர் என்பவனுடன், அவன் ஏற்கனவே கல்யாணம் ஆனவன் என்பது தெரியாமல் பழகி, தெரிந்த பின்னரும் அவனை ஒதுக்க முடியாமல், அவன் வரும்போதெல்லாம் வெளியே அவனுடன் செல்கிறாள். அவன் சினிமாவில் அவளுக்கு கதாநாயகி வேடம் வாங்கித் தருவதாகவே இத்தனை நாட்களாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்.

சாயா படித்தவள். அவளுக்கும் கல்யாணம் ஆகி, கணவன் மிலிடரியில் இருக்கிறான். அவன் இந்த வருடம் வருகிறேன் என்று சொல்லியிருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறாள் சாயா. அவளுக்கு ஒரு பையனும் உண்டு. சாயா வேலைக்குச் செல்வதால், பையனை அவளின் அம்மா வீட்டில் விட்டிருக்கிறாள். அம்மாவுக்கும் புத்தி சுவாதீனம் இல்லாமலிருப்பதால், பாட்டியும், மாமாவும் பார்த்துக் கொள்வதால், சாயாவும், ஜமுனாவும் தனியே வசித்து வருகிறார்கள்.

பாஸ்கர் அடிக்கடி ஜமுனாவைப் பார்க்க வருவது, சாயாவுக்குப் பிடிக்காமல் அவள் விடுதிக்குப் போகிறாள். தற்கொலை எண்ணத்தில் இருக்கும் ஜமுனாவை, பக்கத்துக்கு வீட்டு டீச்சரம்மா தேற்றுகிறாள்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் இடையில் தண்ணீர் பிரச்சினையும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இறுதியில், ஜமுனா என்ன ஆனாள் ?
சாயா அவளிடம் திரும்ப வந்து விட்டாளா ?
சாயாவின் கணவன் மிலிடரியில் இருந்து திரும்ப வந்தானா?
சாயாவின் பையன் என்ன ஆனான்?
பாஸ்கர் என்ன ஆனான்?

நாவலைப் படித்துப் பாருங்கள்.

நாவலில் ஓரிடத்தில்; "இப்போ பகவானே வந்தாக் கூட கொஞ்சம் திண்ணையில் காத்திருங்கோ, குழாயிலே தண்ணி வரதை நன்னா பார்த்துட்டு வரோம்ன்னுதான் சொல்லுவோம்".

இன்னொரு இடத்தில், ஜமுனாவைத் தேற்றும் டீச்சர், வீதியில் இரண்டு குழந்தைகள் தனது தேவைக்கும், சக்திக்கும் அதிகமான தண்ணீரை கொண்டு செல்வதைப் பற்றி பேசும் காட்சி, தன்னம்பிக்கை வர வைக்கக் கூடிய இடம்.

நடு இரவில் கொட்டும் மழையில், மழைத் தண்ணீர் பிடிக்க எழுப்பும் மனைவி, வீட்டுக்கார அம்மாள், டீச்சரின் மாமியார், கணவன், ஜமுனாவின் அம்மா, பாட்டி என ஒவ்வொரு பாத்திரமும் அதன் கதை சொல்லலும் அருமை.

தண்ணீர் போகும் போக்கிலே தான் நமது வாழ்க்கையும் செல்வது போலத் தோன்றுகிறது.

தண்ணீர்
அசோகமித்திரன்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூபாய் நூறு.


14 comments:

  1. படித்ததை மட்டும் எழுதாமல் உள்ளக்கருத்தையும் கோர்த்து எழுதியது பாராட்டத்தக்கது. குட். ;-))
    நாவல் அறிமுகத்திற்கு நன்றி. ;-)

    ReplyDelete
  2. அசோகமித்திரன் எனக்கு மிகவும் பிடித்த இயல்புநடை எழுத்தாளர்... ’’ தண்ணீர்’’ அவரது கதை சுருக்க அறிமுகம் முழுக் கதையயும் படிக்க தூண்டுகிறது...நன்றி தம்பி...

    ReplyDelete
  3. 'வாழ்க்கையில் உன்னதமானதெல்லாம் இலவசம் என்ற பழமொழி அன்று உண்டு' //
    நாவல் அறிமுகத்திற்கு நன்றி. ;-

    ReplyDelete
  4. நான் இதுவரை வாசிக்கவில்லை! முயற்சிக்கிறேன்! பகிர்தலுக்கு நன்றி!

    ReplyDelete
  5. நல்லதொரு நாவலை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  6. @RVS
    நன்றிங்க அண்ணா.

    ReplyDelete
  7. @பத்மநாபன்
    இது தான் நான் படித்த அவரின் முதல் நாவல் அண்ணா.
    நாவலைப் படித்துப் பாருங்கள்.
    நன்றிங்க

    ReplyDelete
  8. @இராஜராஜேஸ்வரி
    நன்றிங்க

    ReplyDelete
  9. @ஜீ...
    படித்துப் பாருங்கள் ஜீ.
    நல்லதொரு நாவல்.

    ReplyDelete
  10. தண்ணீர் புத்தகம் வாங்கும் எண்ணத்தை தூண்டி உள்ளீர்கள். நன்றி!

    ReplyDelete
  11. @சிவகுமார்
    நன்றிங்க.

    ReplyDelete
  12. இன்னும் இந்தப் புத்தகம் படிக்கலைங்க.. படிக்கணும்.. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  13. @க.பாலாசி
    படித்துப் பாருங்கள், சிறு புத்தகம் என்றாலும் நல்ல கதை.
    நன்றிங்க.

    ReplyDelete